கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மட்டும் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், ராகுல் காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இது காங்கிரஸ் கட்சியினருக்கு எழுச்சி அளிப்பதாக அமைந்துவிட்டது.
அந்த போராட்டத்தின் சமயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களைக் கூட போலீசார் மூர்க்கத்தனமாகக் கையாண்டதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து காங்கிரஸ் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் கை உடைந்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் எம்பி ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லும் வீடியோவும் பரபரப்பைக் கிளப்பியது. போலீசார் அவர் மீது தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கரூர் எம்பி ஜோதிமணி டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.