டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த மே 30-ஆம் தேதி கைதான சத்யேந்தர் ஜெயினின் அமலாக்கத் துறை காவல் ஜூன் 13-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அவரது காவலை இரு வாரங்களுக்கு நீதிமன்றம் நீட்டித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரும் மனு மீது அவரது தரப்பில் மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.