ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பரூக் அப்துல்லா நிறுத்தப்படலாம் என செய்திகள் பரவிய நிலையில், பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். பரூக் அப்துல்லா இது தொடர்பாக கூறும் போது, ” எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட நான் விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீர் மிகவும் இக்கட்டான சூழலை கடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிச்சயமற்ற சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு எனது உதவி தேவையென கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சரத்பவார் போட்டியிட மறுப்பு தெரிவித்த நிலையில், பரூக் அப்துல்லாவும் போட்டியிட மறுத்துள்ளார். இதனால், வரும் 21 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.