அக்னிபத் திட்டம் மூலம் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்: கவர்னர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு சென்ற கவர்னர் அங்கு நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார். விழாவில் வ.உ.சி. குறித்த புத்தகத்தை கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

அக்னிபத் திட்டம் புரட்சிகரமான திட்டம். 17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் தான் அக்னிபத். அக்னிபத் திட்டத்தில் சேருவோருக்கு 4 ஆண்டு முடிவில் ரூ.12 லட்சம் கொடுக்கப்படுகிறது. சிறப்பான திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் பொது சொத்துகளுக்கு தீ வைக்கின்றனர். 21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இத்திட்டம் உதவும். திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும்.

சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.