யாரிடமும் லஞ்சம் வாங்காதே என என் தாய் அறிவுறுத்தினார்: பிரதமர் மோடி

ஏழைகளின் நலனுக்காக பாடுபடு. எந்தக் காலத்திலும், எதற்காகவும், யாரிடமும் லஞ்சம் வாங்காதே என என் தாய் அறிவுறுத்தினார் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென், நேற்று தன் 100வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி குஜராத்துக்கு நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை, 6:30 மணிக்கு காந்திநகரில் தன் தாய் வசிக்கும் வீட்டுக்குச் சென்றார். தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவருடன் சேர்ந்து பூஜை செய்தார். பின், தாயின் பாதங்களை கழுவி பூஜை செய்த பிரதமர், அந்தத் தண்ணீரை தன் கண்களில் தடவிக் கொண்டார். இதன் பின், தாய்க்கு மாலையும், பொன்னாடையும் அணிவித்து காலில் விழுந்து வணங்கி, அவரது ஆசிகளை பெற்றார். சிறிது நேரம், தாயின் கால்கள் அருகே அமர்ந்தபடி அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

தாயின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடனான தன் நினைவுகள் பற்றி, சமூக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டு உள்ளதாவது:-

அம்மா- என்ற வார்த்தைக்கு இணையான வேறு சொல்லை எந்த அகராதியிலும் காண முடியாது. உலகம் முழுதும், நாடு அல்லது மதம் என எதுவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு அவர்களது தாயின் மீது தனிப்பாசம் இருக்கும். குழந்தைகளின் நலனுக்காக தங்கள் விருப்பத்தையும், தேவைகளையும் தாயார் தியாகம் செய்கின்றனர். என் தாயும் அதுபோல் ஒரு தியாகி தான். என் தாய், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பிறந்தவுடன் தன் தாயை இழந்து விட்டார். அதனால் அவருக்கு தாய்ப்பாசம் கிடைக்கவில்லை. அவரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை; படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ள முடியவில்லை. சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்கு பின்னும் ஏழ்மையின் பிடியிலேயே என் தாய் வாழ்ந்து வந்தார்.

வத் நகரில் எங்கள் குடும்பம், ஒரு ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில் வசித்தது. கழிப்பறை அல்லது குளியல் அறை என்பது எங்களுக்கு ஆடம்பரமான ஒன்று. மண் சுவரும், ஓட்டுக் கூரையும் கொண்ட ஒரு அறை குடியிருப்பை வீடு என்று அழைத்தோம். கடிகாரம் ஓயாமல் சுழல்வது போல, அப்பாவும் அதிகாலையிலேயே எழுந்து, சிறிய டீக்கடையை திறக்கச் செல்வார். என் தாய் பல வீடுகளில் பாத்திரம் தேய்த்தும், ராட்டை சுற்றியும் சம்பாதித்தார். எங்கள் வீடு சிறியதாக இருந்தாலும், என் தாய் பரந்த மனம் உடையவர்.

என் தந்தையின் நெருங்கிய முஸ்லிம் நண்பர் ஒருவர், எதிர்பாராத விதமாக காலமாகி விட்டார். அவரது மகன் அப்பாசை, எங்களது வீட்டிற்கு என் தந்தை அழைத்து வந்தார். அப்பாஸ் எங்கள் வீட்டில் தங்கிப் படித்தார். என் சகோதர – சகோதரிகள் மீது காட்டுவதைப் போன்றே அப்பாசிடமும், அம்மா பாசம் காட்டி வளர்த்து வந்தார்.
ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையின் போது, அப்பாசிற்கு பிடித்த தின்பண்டங்களை செய்து கொடுப்பார். கடந்த காலங்களில் இரண்டே இரண்டு முறை மட்டுமே என் தாய், நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து, ஜம்மு – காஷ்மீரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றிவைத்து திரும்பி வந்த போது ஆமதாபாதில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, என் நெற்றியில் திலகமிட்டார். அதற்கு பின் குஜராத் முதல்வராக நான் பதவியேற்ற விழாவில் தாய் பங்கேற்றார். இந்த இரண்டை தவிர, அவர் வேறு எந்த நிகழ்ச்சியிலும் என்னுடன் பங்கேற்றதில்லை. குஜராத் முதல்வராக பதவியேற்றபோது என் ஆசிரியர்கள் அனைவரையும் பொதுமேடையில் கவுரவப்படுத்த நினைத்தேன். என் தாயாரைத் தான், வாழ்க்கையில் பெரிய ஆசிரியையாக நினைத்திருந்தேன். ஆனால் என் அன்னை மறுத்து விட்டார். ‘நான் ஒரு சாதாரண பிரஜை. நான் உன்னை பெற்றெடுத்திருந்தாலும் கடவுளின் அருளும், மக்களின் ஆசியும் உன்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது’ எனக் கூறி, மேடைக்கு வர மறுத்து விட்டார்.

நாட்டில், 1952 முதல், இதுவரை நடந்த தேர்தல்களில் அவர் ஒரு முறை கூட ஓட்டளிக்காமல் இருந்ததில்லை. சமீபத்தில் நடந்த காந்தி நகர் நகராட்சி தேர்தலிலும் தன் ஜனநாயக கடமையை ஆற்றினார். என் அம்மாவிடம் எப்போதும் எந்த சொத்துக்களும் இல்லை. அவர், ஒரு எறும்பு அளவு கூட தங்கம் அணிந்து பார்க்கவில்லை. இப்போதும் ஒரு சிறு அறையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் அன்னைக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்க மாட்டார். அதே குணங்களை அவர் எனக்கும் கற்றுத் தந்தார்.

தினசரி பிரார்த்தனைகளை அவர் இப்போதும் தொடர்ந்து செய்கிறார். என் தாயாருக்கு வயதாகி விட்டாலும், ஞாபக சக்தி அதிகமாக உள்ளது. சமீபத்தில் அவரிடம், ‘தினமும் எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்கிறீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘டிவியில் எல்லோரும் ஏதாவது காரணத்துக்காக அடிக்கடி சண்டை போட்டு கொண்டுள்ளனர். அமைதியாக, விளக்கமாக வாசிக்கப்படும் செய்திகளை மட்டுமே பார்ப்பேன்’ என்றார்.

காந்தி நகரில் என் சகோதரர்கள் மற்றும் உறவினர் குடும்பங்களுடன் வசித்தாலும், இந்த வயதிலும் அவரது வேலைகளை அவரே செய்வதற்கு முயற்சிக்கிறார். துாய்மையில் அவர் கவனம் செலுத்துவதை இப்போதும் கூட காணலாம். வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்து பெற்றோரின் ஆசியை வேண்டினேன். என் தந்தை மனம் வெதும்பி, ‘உன் விருப்பம்’ என்றார். ‘உன் மனம் என்ன சொல்கிறதோ அதுபோல் செய்’ என, என் தாய் கூறினார். குஜராத் முதல்வராக நான் பதவியேற்கப் போவதை தெரிவித்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்த என் தாய், மீண்டும் நான் அவருடன் தங்கப்போகிறேனா எனக் கேட்டார்.

ஆனால் அவருக்கு நான் என்ன பதில் கூறப்போகிறேன் என்பது நன்றாகவே தெரியும். அதனால் ‘அரசில் உன் பணி குறித்து எனக்கு தெரியாது. ‘ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும், யாரிடமும், எதற்காகவும் லஞ்சம் வாங்காதே; ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்து’ என்றார். என் பெற்றோரின் வாழ்க்கையில் நேர்மையும், சுயமரியாதையும் தான், அவர்களின் மிகப்பெரும் பண்புகளாக இருந்ததை உணர முடிகிறது. எந்த சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் கற்றுவைத்திருந்த ஒரே மந்திரம் கடின உழைப்பு; தொடர் கடின உழைப்பு. இவ்வாறு பிரதமர் அதில் கூறியுள்ளார்.