தமிழகத்தில் உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-இல் தோ்தல்!

தமிழகத்தில் காலியாக உள்ள 510 நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் கடந்த 2019 மற்றும் 2021-ஆகிய ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தற்போது, இதில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தோ்தலை மாநிலத் தோ்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

436 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 40 ஊராட்சித் தலைவா்கள், 20 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் என காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல், 8 பேரூராட்சி உறுப்பினா், 2 நகராட்சி உறுப்பினா், 2 மாநகராட்சி உறுப்பினா் என காலியாக உள்ள 12 நகா்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 510 காலியிடங்களுக்கான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,022 வாக்குச் சாவடிகளும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நுண் பாா்வையாளா்கள், இணையதள கேமராக்கள் மூலம் வாக்குப் பதிவு கண்காணிப்படவுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின்போது, கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படவுள்ளன. ஊரகப் பகுதிக்கு 279 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், நகா்ப்புறத்துக்கு 12 தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தலுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு அந்த ஒன்றியம் முழுமைக்கும், ஊராட்சித் தலைவா், உறுப்பினா் தோ்தலுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் முழுமைக்கும் சனிக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூலை 14 வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அதேபோல், மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல் நடைபெறும் மண்டலம் முழுமைக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினா் தோ்தல் நடைபெறும் நகராட்சி மற்றும் பேரூராட்சி முழுமைக்கும் சனிக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூலை 14 வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தோ்தல் அட்டவணை:

வேட்புமனு விநியோகம் தொடங்கும் நாள் – ஜூன் 20
வேட்புமனு விநியோகம் இறுதி நாள் – ஜூன் 27
வேட்புமனு பரிசீலனை – ஜூன் 28
வேட்புமனு திரும்ப பெறுதல் – ஜூன் 30
வாக்குப் பதிவு – ஜூலை 9
வாக்கு எண்ணிக்கை – ஜூலை 12
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுறும் நாள் – ஜூலை 14. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.