அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பக அந்த கட்சியின் துணை தலைவர் மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அண்மையில் மத்திய அரசு அறிவித்த அக்னி பாதை திட்டம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்தால், புதிதாக சேருபவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே ராணுவத்தில் பணிபுரிபவர்களும் மனச் சோர்வடைவர். முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ‘அக்னி பாதை’ திட்டம், பெயருக்கேற்ப நாடு முழுவதும் ரயில்கள் எரிப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு என இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் அதிக அளவில் இளைஞர்களை சேர்ப்போம் எனக் கூறி தொடங்கப்படும் இத்திட்டத்தால், தங்களது ராணுவப் பணி கனவு கலைந்துபோய் விட்டதாக புகார் தெரிவிக்கின்றனர் இளைஞர்கள். பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, தெலங்கானா, ராஜஸ்தான், டெல்லி என பல மாநிலங்களில் பரவிய போராட்டங்கள், தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் கதி என்ன? ஓய்வூதியமும் கிடையாது, அதற்குப் பிறகான வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதமும் கிடையாது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியுமா?
சிறு வயது முதலே ராணுவத்தில் சேர விரும்பி, அதற்காக உடல் தகுதி, தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, குறுகியகால, தற்காலிகப் பணி மகிழ்ச்சியைத் தருமா?. வயது வரம்பு அதிகரிப்பு, துணை ராணுவம், மத்திய பாதுகாப்புப் படை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்றெல்லாம் நம்பமுடியாத சலுகைகளை அறிவித்தாலும், இளைஞர்கள் அவற்றை நம்ப தயாராக இல்லை. தேசத்தின் எல்லையை பாதுகாக்க, உயிரையே தியாகமாக தரும் வேலையை, எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைப்பது சரிவருமா?
பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகைகளை அள்ளித் தரும் மத்திய அரசு, பணத்தால் மதிப்பிட முடியாத ராணுவப் பணியில் சிக்கனம் பார்ப்பது சரியல்ல. எல்லையை காக்க அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மையோடு சேரும் இளைஞர்களை மட்டுமல்ல, ஏற்கெனவே பணிபுரியும் ராணுவ வீரர்களையும் இந்த திட்டம் ஏமாற்றமடையச் செய்யும். ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்களே இதை எதிர்க்கிறார்கள் என்றால், ஏதோ கோளாறு உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாடு முழுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமை. அதேசமயம், தொலைநோக்கற்ற, குறுகிய மனப்பான்மையுடன் கூடிய திட்டங்களை வகுத்து, இளைஞர்களை ஏமாற்றக் கூடாது. அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.