அக்னிபத் திட்டம் வாபஸ் இல்லை என்றும், தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த திட்டத்தை திரும்ப பெறக்கோரி பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதைப்போல அக்னிபத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முற்போக்கான நடவடிக்கை ஆனால் இந்த திட்டம் திரும்ப பெறப்பட மாட்டாது என மத்திய அரசின் ராணுவ நலத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முப்படைகளை இளமையாக மாற்றுவதற்கு இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. அப்படியிருக்க அக்னிபத் திட்டத்தை ஏன் திரும்பப்பெற வேண்டும்? இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவம் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது. இதில் தீ வைப்பு, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இடமில்லை. அக்னிபத் திட்டத்தில் முப்படைகளில் சேர்வோரிடம் இருந்து, இதுபோன்ற போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடவில்லை என்ற சான்றிதழ் பெறப்படும். போலீஸ் மூலமான சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும். அப்போது யார் மீதாவது போலீஸ் வழக்கு இருப்பது கண்டறியப்பட்டால், அவரால் ராணுவத்தில் சேர முடியாது.
அக்னி வீரர்களுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். போராட்டத்தின் பின்னர்தான் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு. ராணுவத்தில் இத்தகைய சீர்திருத்தம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது 32-ல் இருந்து 26 ஆக குறையும். நமது நாடு இளமையானது. அப்படியிருக்க ராணுவம் 32 வயதில் இருப்பது நன்றாக இருக்காது. எதிர்கால போர்களுக்கு இளமையும், தொழில்நுட்பத்திறனும் கொண்ட வீரர்கள்தான் தேவை. இவ்வாறு அனில் புரி கூறினார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு விரிவான அட்டவணையை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி ராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பன்சி பொன்னப்பா, ’40 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் 83 ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக வரைவு அறிக்கை திங்கட்கிழமை (இன்று) வெளியிடப்படும். அடுத்தடுத்த அறிவிப்புகள் ஜூலை 1 முதல் பல்வேறு ஆட்சேர்ப்பு பிரிவுகளால் வெளியிடப்படும்’ என்று கூறினார்.
நாடு முழுவதும் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறும் எனக்கூறிய அவர், இதில் தேர்வு செய்யப்படும் 25 ஆயிரம் பேர் அடங்கிய முதல் குழுவினர் டிசம்பர் முதல் மற்றும் 2-வது வாரங்களில் பயிற்சியில் சேர்வார்கள் என தெரிவித்தார். இரண்டாவது பிரிவினர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயிற்சியில் சேர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடற்படை, விமானப்படை கடற்படையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறும்போது, ‘அக்னிபத் திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் 25-ந்தேதிக்கு முன் வெளியிடப்படும். தொடர்ந்து நடத்தப்படும் ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்களின் முதல் பிரிவினர் நவம்பர் 21-ந்தேதிக்கு முன் பயிற்சியில் சேர்வார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களும், பெண்களும் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
விமானப்படையின் ஆட்சேர்ப்பு திட்டம் குறித்து ஏர் மார்ஷல் எஸ்.கே.ஷா விவரித்தார். அவர் கூறுகையில், ‘விமானப்படையில் சேர்வதற்கான முன்பதிவு நடைமுறைகள் 24-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஆன்லைன் தேர்வுக்கான நடைமுறைகள் ஜூலை 24-ந்தேதி தொடங்கும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் முதல் குழுவினர் டிசம்பர் 30-ந்தேதிக்குள் பயிற்சியில் சேர்வதற்காக நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய மந்திரியும், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங், இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவம் என்பது வேலைவாய்ப்பு அளிக்கும் இடம் அல்ல என்றும் அது ஒரு கடையோ அல்லது நிறுவனமோ அல்ல என்றும் குறிப்பிட்டார். விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் இணையலாம் என்று தெரிவித்த அவர், உங்களை யாராவது ராணுவத்தில் இணைந்து தான் ஆக வேண்டும் என கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.
அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் ஒருவர் 4 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டால், அதன் பிறகு அவரது எதிர்காலத்தை பார்த்துக்கொள்ளும் திறன் அவருக்கே வாய்த்துவிடும் என குறிப்பிட்ட வி.கே. சிங், அவருக்கு யாருடைய ஆதரவும் தேவை இருக்காது என்றார். மேலும் பேருந்துகளை, ரயில்களை எரிப்பவர்கள் இந்த பணியில் சேர தகுதி அற்றவர்கள் என தெரிவித்த வி.கே. சிங், இவ்வாறு எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்துவிடும் என்று யாராவது கூறினார்களா என்று கேள்வி எழுப்பினார்.