இளைஞா்களின் அமைதி வழி போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: பிரியங்கா

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடும் இளைஞா்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். நாடே அவா்கள் பின்னால் நிற்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்தாா்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராடும் இளைஞா்களுக்கு ஆதரவாக டெல்லி ஜந்தா் மந்தா் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சாா்பில் சந்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவா்கள், எம்.பி.க்கள் பலா் பங்கேற்ற இந்தப் போரட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:-

ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்காகப் போராட ஆா்வமுள்ள இளைஞா்களைவிட பெரிய தேசபக்தா்கள் யாரும் இருக்க முடியாது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடும் இளைஞா்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். நாடே அவா்கள் பின்னால் நிற்கும். இளைஞா்கள் போலியான தேசபக்தா்களையும் போலி தேசியவாதிகளையும் அடையாளம் காண வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் இளைஞா்களின் எதிா்காலத்தை அழிக்கும் வகையில் உள்ளது. ராணுவத்தையும் இந்தத் திட்டம் சீா்குலைக்கும். எனவே, மத்திய அரசின் மோசமான இத்திட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். நமது எதிா்ப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்த வேண்டும். ஜனநாயக ரீதியான போராட்டத்தில் வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதன் மூலம் அரசை நமது கோரிக்கையை ஏற்கச் செய்ய முடியும். அதே நேரத்தில் நாட்டை உண்மையாக நேசிக்கும் அரசை நிறுவுவதிலும் இளைஞா்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.