ஸ்வப்னா சுரேசை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதானவருமான சரிதா நாயர் பரபரப்பு குற்றசாட்டை சுமத்தி உள்ளார்.
கேரள மாநில அரசியலில் பெுரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், அண்மையில் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் சிறையில் இருந்தபோது ஸ்வப்னாவும் ஜெயலில் இருந்தார். அப்போது அவர், இந்த வழக்கில் முதல்வரை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் இப்போது தங்க கடத்தலில் முதல்வரும், அவரது குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டிருப்பதாக அவரே குற்றம் சாட்டுகிறார். அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர். இவ்வாறு சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஸ்வப்னா சுரேஷின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அந்த அறிக்கையை தனி நபர்களுக்கு பகிர முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக சரிதா நாயர் தரப்பு தெரிவித்துள்ளது
இந்நிலையில், ஸ்வப்னா அளித்த ரகசிய வாக்குமூலம் தொடர்பாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை தீர்மானித்து உள்ளது. இதற்காக வரும் 22ம் தேதி கொச்சியில் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, நீதிமன்றத்தில் ஸ்வப்னா அளித்த ரகசிய வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பெற்றுள்ளது. மேலும், சுங்க இலாகாவிடம் அவர் அளித்த ரகசிய வாக்குமூலம் விவரங்களையும் வாங்கியுள்ளது. இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னர் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது.