கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்

இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மத்தளம்பாறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு தலைவராக உள்ள ஷோகோ நிறுவன விழாவில் பேசியதாவது:-

நான் குக்கிராமத்தில் பிறந்தவன். எங்கள் கிராமத்திலிருந்து பள்ளிக்கு 8 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறுவார். ஸ்ரீதர் வேம்பு இந்த கிராமத்தின் கலாச்சாரமும் பண்பாடும் பாதிக்காத வண்ணம் கிராமத்தை உயர்த்துவது எப்படி என சோதனை முறையில் செய்து காட்டியுள்ளார். நகரமயமாதலால் தான் வாழ்வு உயரும் என உலகளவில் மக்கள் நம்புகின்றனர். அதற்கு பெரும் விலை தர வேண்டியுள்ளது. அந்த விலை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இடையிலான நட்பு குறைந்து போவதுதான்.

நகர்ப்புறங்களில் பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதே தெரிவதில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் இயந்திரத்தனமாக மாறிப்போய் விடுகிறது. நகர்ப்புறங்களில் தனி மனிதர்கள் மனிதத்தன்மையை இழக்க நேரிடுகிறது. நகரமயமாக்கல் இந்தியாவின் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் மிரட்டல் விடுப்பதாக உள்ளது. கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது. நான் இந்த கிராமத்திற்கு வந்தபோது இங்குள்ள மக்கள் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. நகர்ப்புறங்களில் நம்மை யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த கிராமத்திற்கு வந்தபோது ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருப்பதாக தோன்றியது. இவ்வாறு அவர் கூறினார்.