மத்திய அரசு திட்டங்களை தி.மு.க., காப்பியடிக்கிறது: அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், தி.மு.க., சிறந்து விளங்குகிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாநாடு நடந்தது. மாநாடு மேடை, தமிழக சட்டசபை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

பிரதமர் மோடி ஆட்சியில் எட்டு ஆண்டுகளில், 11 கோடி பேருக்கு வீடு, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்திலிருந்து சொத்து பங்கீடு வரையில் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓராண்டில், 6,600 மருத்துவ பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். விவசாயிக்கு கவுரவம் கொடுத்துள்ளோம்; தமிழகத்தில் முத்திரா கடனில் 36 லட்சம் பேருக்கு சிறு, குறு கடன் வழங்கப்பட்டுள்ளது.
2014க்கு பின், கொப்பரைக்கு ஆதார விலை கொண்டு வந்தது பா.ஜ., அரசு தான். கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கிலோவுக்கு 150 ரூபாயாக உயர்த்தப்படும். பா.ஜ., ஆட்சியில் பொள்ளாச்சியில் தென்னை நார் வாரியம் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. 2016ல் தென்னை நார் பொருட்கள் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. தற்போது, 3,900 கோடியாக உயர்த்தியுள்ளோம். இங்குள்ள விவசாயிகளை காக்க, ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். பொள்ளாச்சியை தலைமையிடாக கொண்டு மாவட்டம் உருவாக்குவோம்.

தமிழகத்தில், கூட்டு பலாத்கார சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. கருமுட்டை விற்பனை என பல புதுவித குற்றங்கள் நடக்கின்றன. மாநிலம் இப்படி இருக்கையில், உ.பி., வரையில் ஸ்டாலின் அலை வீசுகிறது என, காமெடி செய்கின்றனர். 2024ல் இந்தியாவின் துணைப் பிரதமராகலாம் என கனவு காண்கின்றனர்.

தடுப்பூசிக்கான ஐந்து மருந்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசியை வி.ஐ.பி., என்றில்லாமல், அனைவருக்கும் சமமாக, பாரபட்சமின்றி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னைக்கு பின், பா.ஜ.,க்கு ஆதரவு அதிகரித்துள்ளது. பா.ஜ., மத ரீதியான கட்சியென, தி.மு.க., பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறது. ஸ்டாலின் முதல்வரான பின், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். ஒன்பது மாதங்களாகியும் ஒரு முதல்வர் கூட பதில் கடிதம் போடவில்லை.

கோவையில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த பெண் மருத்துவம் படிக்கிறார். தேனியில் பூக்கள் விற்பனை செய்த பெண் அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கிறார். தி.மு.க.,வை தாண்டி வேறு யாரும் ‘நீட்’ தேர்வை எதிர்க்கவில்லை. ‘காயர்’ தொழிலை பாதுகாக்க பா.ஜ., நடவடிக்கை எடுத்து வருகிறது. இல்லம் தேடி கல்வி திட்டம் மத்திய அரசு துவங்கி, 800 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு திட்டத்துக்கு, தி.மு.க., பெயர் வைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில் தி.மு.க., சிறந்து விளங்குகிறது.

பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை அறிந்து, கச்சத்தீவை மீட்போம் என, தி.மு.க., நாடகமாடுகிறது. உலகின் படைகளில், இந்தியா, 3வது இடத்தில் உள்ளது. இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபத் திட்டம். பல பாதுகாப்பு படை பிரிவுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியை விட, மூன்று மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை தி.மு.க.,வினர் கேரளாவுக்கு மொத்தமாக விற்று விட்டனர்.
பொள்ளாச்சியில் இருந்து ஒரு நாளைக்கு, 7,000 லோடு மண்ணை, ஒரு தனியார் நிறுவனம் கேரளாவுக்கு கடத்துகிறது. மண் வளத்தை காக்க கேரளாவில் மண் எடுக்க அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால், நமது மண்ணை கேரளாவுக்கு விற்கின்றனர். மண் கடத்தலை எந்த அரசு அதிகாரிகளும் தடுப்பதில்லை. தி.மு.க., மாவட்ட செயலாளர், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள், போலீசாரை செயல்படவிடாமல் கைகளை கட்டியுள்ளனர். கனிம வளங்கள் கொள்ளையை தடுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கேரளாவுக்கு மண் கொண்டு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சிறைபிடிப்போம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.