அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது.
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன. ரெயில்களுக்கு தீவைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்பட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பல பகுதிகளிலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் இன்றும் நாடு முழுவதும் அமைதி வழியில் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி பஸ், ரெயில் நிலைய பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை. பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்தந்த மாநிலங்களில் உள்ள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஜார்க்கண்டில் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின் போது 400க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.