தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் எழுவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5-7-2020 அன்று சுங்கத்துறையினர், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி பெங்களூருவில் 11-7-2020 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான சுவப்னா சுரேஷ் மற்றும் சந்திப் நாயர் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன், தூதரகத்தின் இன்னொரு ஊழியர் சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட சுவப்னா சுரேஷ் 16 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சுவப்னா சுரேஷ் சில தினங்களுக்கு முன் கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அதில் தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி ஜலீல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். இதனால் கேரளாவில் முதல்-மந்திரி பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் திருவனந்தபுரம் வந்த மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜனதா நம்புகிறதா?’ என்று நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு மத்திய மந்திரி முரளீதரன், ‘தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற வலுவான சந்தேகமும், கவலையும் பா.ஜனதாவுக்கு உள்ளது’ என்றார். அவர் மேலும் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் கீழ் உள்ள பொது நிர்வாகத்துறை செயல்பாடு, ஐக்கிய அரபு எமிரேட் தூதரக ஊழியர்களுடனான தொடர்பு போன்றவை மற்ற மாநிலங்களில் கேள்விப்படாத ஒன்றாகும். மேலும் இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் விசாரணையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டவை மற்றும் மத்திய விசாரணை அமைப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதும் சந்தேகத்துக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த வழக்கில் நேர்மையான, நியாயமான விசாரணைக்கு கேரள அரசே தடையாக இருந்தது. கேரள போலீஸ் துறை திறமையற்றவர்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என்றாலும், மாநில அரசின் அரசியல் தலையீடு காரணமாக அவர்களால் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை.
பிரதமராக மோடி இருக்கும் வரை கடத்தல் அல்லது ஊழலில் தொடர்பு இருக்கும் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. மேலும், தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சுவப்னா சுரேஷ் சமீபத்தில் முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் ஆகியோர் மீது சாட்டிய பகிரங்க குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி முறையான விளக்கம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.