காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பேச்சுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என, அதன் தலைவர் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், ‘காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நீர் பங்கீட்டை செயல்படுத்துவது தான் தங்கள் கடமை’ என, அவர் கூறி உள்ளார். இது, முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி., நீரை, மாதாந்திர அட்டவணைப்படி அளிக்கிறதா என்பதைத் தான், காவிரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
அதை விடுத்து, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து விவாதிப்போம் என, காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் கூறுவது, அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. அத்துடன், இந்த பொருள் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த தருணத்தில், மேட்டூர் அணையிலும், கல்லணையிலும், காவிரி மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது, விவசாயிகள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படுவது, மேலும் கூடுதலாக 67 டி.எம்.சி., நீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதிப்பதற்கு சமம். இதனால், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறையும். ஏற்கனவே போதிய நீர் இன்றி, சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், ஒட்டுமொத்த விவசாயமும், வெகுவாக பாதிக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம், தனக்குள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக அரசுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில் தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் பொருள் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும், ஆணையத்தின் ஆய்வு வரம்பில், மேகதாது அணை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி, அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.