சீன நிறுவனங்கள் மோசடிக்கு இந்திய ஆடிட்டர்கள் உடந்தை!

சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மோசடிக்கு உதவிய 400 இந்திய ஆடிட்டர்கள் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது.

லடாக் எல்லையில் அத்துமீறி வரும் சீன ராணுவத்தால் கடந்த 2 ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தது முதல், சீனா உடனான வர்த்தக உறவை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், இந்தியாவில் செயல்படும் அந்நாட்டு நிறுவனங்களின் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அவற்றின் நிதி பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பல்வேறு சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்களை நிறுவி செயல்பட்டு இருப்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்கு இந்தியாவை சேர்ந்த ஆடிட்டர்கள் உதவி செய்து இருப்பதும் இந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 400க்கும் மேற்பட்ட ஆடிட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.