உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை குறித்து புகார் தெரிவித்தார்.
தருமபுரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தருமபுரி மாவட்ட, உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். பொன்.மாணிக்கவேல் கூறியதாவது:-
உலகில் இருக்கும் அனைத்து சிவனடியார்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் உலக சிவனடியார்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும், ஆலயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதும் இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். இங்குள்ள சிறப்புக் கோயில்களில் இருக்கும் விக்ரகங்களை பரிசாகவும் கொடையாகவும் கொடுப்பது அந்த தெய்வங்களையே அவமரியாதை செய்யும் செயல். இதை யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில்களில் இருந்து மாயமான அல்லது திருடப்பட்ட சிலைகளை மீட்க உலக சிவனடியார்கள் அமைப்பு தொடர்ந்து பாடுபடும். இந்த விஷயத்திற்கு மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடவும் தயங்க மாட்டோம்.
தஞ்சாவூர் மாவட்டம் சேந்தங்குடி சிவன் ஆலயத்திலிருந்த உமா மகேஸ்வரி தெய்வ விக்ரகம் 1960ஆம் ஆண்டு வெளிநாட்டு இளவரசி ஒருவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து மனம் மிகுந்த வேதனையளிக்கிறது. நமது கலை, கலாசாரம், பண்பாடு, ஆன்மீகம் உள்ளிட்டைவகளை அறிந்து, உணர்ந்து அந்த விக்ரகத்தை மீண்டும் நம்மிடமே ஒப்படைப்பார் என நம்புகிறோம். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, தெய்வ விக்ரகங்களைப் பரிசாகக் கொடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.
மேலும், மீட்கப்படும் தெய்வ விக்ரகங்களை ஒருபோதும் மியூசியத்தில் வைக்கக் கூடாது, கோவில்களில் மட்டுமே வைக்க வேண்டும். விக்ரகங்களைச் சிலை என்றே கூறக்கூடாது, ஏனென்றால் இறந்தவர்களுக்கு வைக்கப்படுவதே சிலை. கோவில்களில் இருப்பவை தெய்வ விக்ரகங்கள். கோயிலின் பெயரில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முந்தி பருப்பு, மினரல் வாட்டர் என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அப்படிச் சாப்பிடும் பணம் தெய்வத்தின் பணம், இவர்கள் அலுவலர்கள் கிடையாது. உயர் கணக்குப் பிள்ளைகள் அவ்வளவு தான்.
அறநிலையத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. பல இடங்களில் கோயில்களின் விக்ரங்கள் திருடப்பட்டுள்ளன. இதெல்லாம் அறநிலையத்துறைக்கும் தெரியும். உண்டியலில் பத்து ரூபாய்க்குப் போடவேண்டாம். தமிழக கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்குச் சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. சொல்லப் போனால் இந்த குடும்பங்களைச் சார்ந்த அடுத்த வாரிசுகள் அர்ச்சகர் பணிக்கே வரமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.