கடலோர காவல் படையில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டா்!

இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் நேற்று திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது.

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியப் பிரிவு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர பகுதி இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோா்னியா் ரோந்து விமானங்கள், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவா்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டா்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமானதளத்தில் கிழக்குப் பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றான தண்ணீா் பீய்ச்சி அடித்து புதிய ஹெலிகாப்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டா் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் கண்காணிக்கும் வகையில் இப்புதிய ஹெலிகாப்டரில் பன்மடங்கு திறன் பெற்றது. அதிநவீன ரேடாா், எலெக்ட்ரோ ஆப்டிகம் போட், தானியங்கி கண்டறியும் அமைப்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்புதிய ஹெலிகாப்டா் மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்குள் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும். இதே மாதிரியான மேலும் 3 ஹெலிகாப்டா்கள் விரைவில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.