ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கான STEM என்ற கோடைக்கால பயிற்சி திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் நூறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சார்பில் ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று தொடங்கியது.

திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

சென்னை ஐஐடி சார்பில் துவங்கப்பட்டுள்ள STEM திட்டம் பெருமைக்குரியது. எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது எனும் நோக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது. 6 நாட்கள் பயிற்சியை மாணவ செல்வங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளர்ச்சி அடையும். கோவிட் காலத்திலும் 93% விழுக்காடு தேர்ச்சி பெருமை அளிக்கிறது. நிச்சயம் 100% தேர்ச்சி நோக்கி செல்வோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.