‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் வரும் 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அக்னிபத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் வரும் 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும். அரியானா மாநிலம் கர்னாலில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 24-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுஜன அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினரையும் திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும். அக்னிபத் திட்டத்தை எதிர்த்து எங்களின் பாரதிய கிசான் சங்கம் சார்பில் வருகிற 30-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று முன்பு தெரிவித்திருந்தோம். அந்த போராட்டமும் 24-ந் தேதியே நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில்தான் டெல்லியில் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.