முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
மேகதாது, கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்களுக்கான அனுமதி, புதிய கொள்கைகள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. பருவ மழை தொடங்கும் முன்னரே, கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். இந்த சுழலில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது, பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என தெரிகிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக தன்னிடம் இருக்கும் ரிப்போர்ட்டுகளை அவர்களிடம் காண்பித்து சில அறிவுரைகளையும் அவர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.