மிகச் சிறந்த ஜனாதிபதியாக முர்மு திகழ்வார்: பிரதமர் மோடி

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

சமூகத்துக்காகவும், ஏழை, அடித்தட்டு, விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் முர்மு. நல்ல நிர்வாக அனுபவத்தைப் பெற்றவரான அவர், கவர்னராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கொள்கை விஷயங்கள் குறித்த முர்முவின் புரிதலும், அவரின் இரக்கத்தன்மையும் நம் நாட்டுக்கு பெரிதும் பயனளிக்கும். நம் நாட்டின் மிகச் சிறந்த ஜனாதிபதியாக திரவுபதி முர்மு திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் இறந்து விட்டனர். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார். ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் திரவுபதி முர்மு பெற்றார். ஒடிசாவை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.