பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் நேற்று 5-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். பாஜக அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.