அக்னிபாதை திட்டத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடா?: சீமான்

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

அக்னி பாதை திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக் கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன். அவர்களுக்குத் துணை நிற்கிறேன்.

அக்னிபாதை திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன். அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப் போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.