கடலூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல ஆலைகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் ஆலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படுவதில்லை. இதனால் இதுபோன்ற ஆலைகளில் வெடி விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதுபோன்ற ஒரு விபத்து தான் இப்போது கடலூர் எம். புதூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் சிறிய அளவிலான நாட்டு வெடி மற்றும் வானவெடி தயார் செய்யும் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. இதில் இன்று 7 பேர் பணிக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் வழக்கம் போல வான வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிச் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தின் ஓடி வந்து உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தை சேர்ந்த சித்ரா, நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அம்பிகா மற்றும் மூலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.