சேலம், தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 250 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் 27-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்த 108 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
இளங்கலை மட்டுமின்றி கூடுதல் படிப்புகளையும் தொடர்ச்சியாக படித்தால் தான் மருத்துவத்துறையில் சாதிக்க முடியும். முழுமையாக படித்தால் தான் சமூகத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும். ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் 3-க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பாராட்ட உள்ளார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 28 மாணவர்கள் பங்கேற்கிறார்கள். சேலம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை 100 இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரியிலும் 100 இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், கருமுட்டை விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை முறை கருத்தரிப்பு வணிகமயமாவதை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் திருச்சியில் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மையம் சோதனை முறையில் தொடங்கப்பட உள்ளது என்றார்.