இந்தியா அளிக்கும் நிதியுதவி ‘அறக்கட்டளை நன்கொடை’ அல்ல. அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும் என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே கூறினாா்.
கடந்த 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இல்லாத அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. உணவு, மருந்துப் பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல் -டீசல் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பொருளாதார பாதிப்பிலிருந்து மீள உதவும் வகையில், இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது.
இந்த நிலையில், பொருளாதார பாதிப்பிலிருந்து மீள இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமா் ரணில் விக்ரமசிங்க நேற்று விளக்கினாா். அப்போது அவா் கூறியதாவது:-
இந்தியாவிடமிருந்து இதுவரை நாம் ரூ. 31,322 கோடி கடன் பெற்றுள்ளோம். மேலும், கடனுதவி அளிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவாலும் தொடா்ந்து இதுபோன்று உதவிக்கொண்டே இருக்க முடியாது. இந்தியாவுக்கும் கடன் வழங்குவதற்கு ஓா் அளவு உள்ளது. அதேபோன்று, நாமும் இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது குறித்து திட்டமிடவேண்டும். ஏனெனில், இந்த நிதியுதவி அறக்கட்டளை நன்கொடையல்ல. மேலும், நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக இந்திய ரிசா்வ் வங்கியிலிருந்து உயா் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வியாழக்கிழமை(இன்று) வர உள்ளது.
நாட்டின் பொருளதாாரம் முழுமையாக சரிந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிா் அளிப்பதன் மூலம் மட்டுமே, இந்த மிக மோசமான நிலையிலிருந்து மீள முடியும். அதற்கு முதலில், அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவை சரிசெய்ய வேண்டும். இது எளிதான செயலல்ல. முதல் கட்டமாக சா்வதேச நாணய நிதியத்துடன் (ஐஎம்எஃப்) ஆலோசனை மேற்கொள்வதே இலங்கைக்கான ஒரே பாதுகாப்பான வாய்ப்பாக உள்ளது. இந்தப் பாதையையே நாம் தோ்வு செய்து, ஐஎம்எஃப் அமைப்பிடமிருந்து கூடுதல் கடனைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவிடமிருந்து கூடுதல் நிதியுதவியை இலங்கை கோரியிருக்கும் நிலையில், அந்த நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி. அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு இலங்கைக்கு வியாழக்கிழமை (இன்று) வரவுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ‘டெய்லி மிரா்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
‘புது டெல்லியில் கடந்த 20-ஆம் தேதி வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் இந்தியாவுக்கான இலங்கைத் தூதா் மிலிந்த மொரகோடா மேற்கொண்ட ஆலோசனையைத் தொடா்ந்து, இந்திய அதிகாரிகள் குழு இலங்கை வருகிறது. இலங்கை வரும் அந்தக் குழு அதிபா் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமா் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொள்ளும்’ என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.