விடுதலைப்புலிகள் இருவரின் தண்டனை ஏழு ஆண்டாக குறைப்பு!

விடுதலைப் புலிகள் இருவருக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஏழு ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் நடமாட்டம் குறித்து கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசார், 2015 இரவில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் கிருஷ்ணகுமார் உட்பட சிலர் இருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், சயனைடு குப்பிகள், சயனைடு தயாரிக்கும் ரசாயனங்கள், ஜி.பி.எஸ்., கருவிகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, சென்னை உத்தண்டியில் சுபாஷ்கரண் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். வெளிநாட்டில் வாழும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளிடம் இருந்து, சட்ட விரோதமாக நிதி சேகரிக்க உதவியதாகவும், விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டதாகவும் கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கும், உதவிய சுபாஷ்கரன் என்பவருக்கும், ராமநாதபுரம் நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2018ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, இரண்டு பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுவை, நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ‘பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 6 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனையை அனுபவித்து விட்டதால், தண்டனையை குறைக்க வேண்டும்’ என கோரப்பட்டது. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

மனுதாரர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பதால், விடுதலையான பின் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ‘விடுதலையானதும் இந்தியாவை விட்டு வெளியேறுவோம். சட்டம் – ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட மாட்டோம்’ என இருவரும் உறுதியளித்துள்ளனர். எனவே, இவர்களின் சிறை தண்டனையை, 10 ஆண்டுகளில் இருந்து, ஏழு ஆண்டுகளாக இந்த நீதிமன்றம் குறைக்கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.