அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார்.
இன்று (ஜூன் 23) நடந்த அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாகவும், ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2190 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை இன்றே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் கோரிக்கை கடிதத்தை முன்வைத்தனர். இதனையடுத்து வரும் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
இக்கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வேலுமணி, தமிழ்மகன் உசேன் போன்றோர் பேசுகையில் பன்னீர்செல்வத்தின் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இந்த நிகழ்வுகளை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அவரை சூழ்ந்த தொண்டர்கள் சிலர் ஓபிஎஸ் மீது தீர்மான நகல்களை வீசி எறிந்ததாகவும், தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும், முதுகில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் வருகை தந்த வாகனத்தை சிலர் பஞ்சர் ஆக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருமண மண்டபத்தில் இருந்து கிளம்பும் முன்னர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் அறிவிப்பு செல்லும். இது சட்டத்திற்கு புறம்பாக நடந்த பொதுக்குழு கூட்டம். புதிய பொதுக்குழு கூட்ட தேதி செல்லாது என்றார்.
இந்நிலையில் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜேடிசி பிடிபாகரன் உள்ளிட்டோருடன், வைத்திலிங்கம் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 வரைவு தீர்மானங்களை ரத்து செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. தீர்மானங்கள் ரத்தானதால் பொதுக்குழுவே செல்லாது என்று காட்டமாகக் கூறினார்.
மேலும், பதவி வெறியில் நடந்தது பொதுக்குழுவே அல்ல, அரை மணி நேரம் நடந்த ஓரங்க நாடகம். பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர உள்ளோம்.
அதிமுக பொதுக் குழுவில் கத்தியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல, கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள். தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பொதுக்குழுவே செல்லாதக் கூட்டமாகிவிட்டது. காட்டுமிராண்டித்தனமாக பொதுக் குழு நடந்துள்ளது. பொதுக் குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்ட கட்சியின் அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழுவில் இன்று அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. கட்சியின் அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும் என்றும் வைத்திலிங்கம் கூறினார்.