பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும்: காங்கிரஸ்

மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும் என்று அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு நெருக்கடி என்றால், அது வெள்ளம். இது பாஜக ஆட்சிக்காக பாராமுகமாகிவிட்டது. அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காண பிரதமர் மாநிலத்திற்குச் செல்ல வேண்டும், சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும். ஆனால் மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். குஜராத் தேர்தல்களில் அதிகாரம் மட்டுமே. அதுவே பாஜகவுக்கு எல்லாம் என்று கோகோய் கூறினார்.

அசாமின் 34 மாவட்டங்களில் 41 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் தொடர்ந்து தத்தளித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடைநிலைக் கல்வித் துறை, அசாம் அரசின் அனைத்து தொடக்க, மேல்நிலை, மூத்த மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை 5 நாட்களுக்கு முன்னரே அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அசாமில் பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகின்றன. தொடர் மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அசாமின் பல மாவட்டங்களில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கௌஹாத்தி பல்கலைக்கழகம் நடத்தும் சில தேர்வுகள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கான உடற்தகுதி தேர்வு உட்பட பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.