முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

‘அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து கேட்டுக்கொண்டால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சிவசேனை மூத்த அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே, ஆளும் கூட்டணிக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள நிலையில் முதல்வா் உத்தவ் தாக்கரே முதல் முறையாக நேற்று தனது மெளனத்தைக் கலைத்தாா். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவா், முகநூல் நேரலை வழியாக 17 நிமிஷங்கள் பேசினாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:-

முதல்வா் பதவிக்கும் சிவசேனை கட்சியின் தலைவா் பதவிக்கும் நான் தகுதியானவன் இல்லை என்று சிவசேனை கட்சியினா் கருதினால் என்னிடம் வந்து என் முகத்துக்கு நேராகக் கூறலாம். நான் உடனடியாகப் பதவி விலகுவேன். அதை விடுத்து சூரத்தில் இருந்துகொண்டும் வேறு நகரங்களில் இருந்து கொண்டும் கருத்துகளைத் தெரிவிப்பது ஏன்? நான் எனது ராஜிநாமா கடிதத்தை தயாராக வைத்திருப்பேன். அதை நீங்கள்(அதிருப்தி எம்எல்ஏக்கள்) பெற்றுக் கொண்டு ஆளுநரிடம் சென்று கொடுக்கலாம்.

முதல்வா் பதவியில் முன் அனுபவம் இல்லாத நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் அளித்த ஆலோசனையின்படி முதல்வா் பதவியை ஏற்றுக் கொண்டேன். எனக்கு அடுத்தபடியாக சிவசேனையைச் சோ்ந்த ஒருவா் முதல்வா் பதவிக்கு வந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினாா்.

இதனைத்தொடா்ந்து தெற்கு மும்பையில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய உத்தவ் தாக்கரே, தெற்கு பாந்தராவில் உள்ள தனது சொந்த வீட்டில் குடியேறினாா்.

இந்நிலையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென சிவசேனையை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

மகா விகாஸ் கூட்டணி இயற்கைக்கு மாறானது. அதிலுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டும்தான் கூட்டணியால் பலன் அடைகின்றனர். அதேவேளையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை கட்சியினர் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ளவர்களின் நன்மை கருதி மகா விகாஸ் கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டும். மாநில நலன் கருதி, அதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மராட்டியத்தின் முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே தொடர்ந்து செயல்படுவார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தான். அவரே மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம் என்றார்.