கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்த நீதிமன்றம், பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த தாமஸ், லீலாம்மா தம்பதியின் மகள் அபயா (21). கன்னியாஸ்திரீயான அவர், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டில் தங்கி, அதே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்தார். கடந்த 1992-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கான்வென்ட் கிணற்றில் அவர் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீஸாரும், பின்னர் குற்றப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினர். இதில் அபயா தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் முடிவுக்கு வந்தனர். ஆனால் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த வழக்கை பின்னர் சிபிஐ விசாரித்தது. இது தற்கொலையல்ல, அபயா கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தபோதிலும், தகுந்த சாட்சியங்கள் இல்லாததாலும், குற்றவாளிகளைக் காணவில்லையென கூறியும் மூன்று முறை விசாரணை நடத்தி முடித்துவைக்கும் அறிக்கையை அளித்தது.
செல்வாக்குள்ள முக்கிய குற்றவாளிகளை சிபிஐ காப்பாற்ற எண்ணுவதாக, 2008-இல் கேரள உயர்நீதிமன்றம் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, நடைபெற்ற தீவிர விசாரணையில், பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்ருக்கயில், கன்னியாஸ்திரீ செபி ஆகிய மூவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த மூவரும் தகாத உறவு வைத்திருந்ததாகவும் அவர்களின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் அபயாவுக்குத் தெரிய வந்ததால், அவர் கோடரியின் கைப்பிடியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாதிரியார் பூத்ருக்கயில் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஜெ.சனல்குமார் தீர்ப்பளித்தார். இருவருக்கும் ஆயுள் தண்டன விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தண்டனையை எதிர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்த நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகியோர் சாரபில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் தலா ரூ.5 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தை வழங்க வேண்டும். வேறு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக் கூடாது. அடுத்த ஆறு மாதத்துக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும், நீதிமன்ற அனுமதியின்றி, மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.