அசாமில் கனமழை: பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு!

அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளதுடன் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து வெள்ளம், நில சரிவுகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 121 ஆக உயர்ந்து உள்ளது. அசாம் வெள்ளத்திற்கு 27 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்றும், ஒரு சில பகுதிகளில் நேரில் சென்றும் அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார். மீட்பு பணியில் படகுகளில் சென்றும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, அசாமின் பிரம்மபுத்திரா, கொப்பிலி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் ஆபத்து அளவை கடந்து ஓடுகிறது.