புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார்.
ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி., செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:-
சிறந்த தலைமையான பிரதமர் மோடியின் கீழ் இந்திய நாடு சுகாதாரத் துறையில் வெற்றி கண்டு வருகிறது, குறிப்பாக கொரோனாவை சமாளித்து தடுத்ததில் நாடு வெற்றிகரமான பணியை செய்துள்ளது. ஜிப்மரில் உள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளி இந்தியாவின் சுகாதார திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, உலகளாவிய பார்வையை பெறும். இது உலகம் ஒரு குடும்பம் என்பதை நினைவுப்படுத்துகிறது. இங்குள்ள சுகாதார நிபுணர்கள் மருத்துவ துாதுவர்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
சர்வதேச பொது சுகாதார கல்வி நிறுவனம், மருத்துவத் துறையில் நம் முயற்சிகளை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். நம் கண்டுபிடிப்புகளும் புதுமையான அணுகுமுறைகளும் மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய உதவி செய்யும். குறிப்பாக, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.
மருத்துவச் சிகிச்சை செலவிற்காக மக்கள் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமரின் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில் 90 நாட்களுக்குள் 60 ஆயிரம் நோயாளிகள் இருதய சிகிச்சை பெற்றனர். பொதுவாக மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவக் காப்பீட்டிற்குள் வருவதில்லை. ஆனால் அதையும் இந்த காப்பீட்டு திட்டத்தில் கொண்டு வந்ததற்காக நன்றி கூறுகிறேன். இந்த சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிறுவனம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மக்களை சென்றடைய உதவும்.
ஜிப்மரில் சில குறைபாடுகள் இருக்கிறது. மருந்து கையிருப்பு, போதிய மருத்துவர்கள் போன்றவை சரி செய்யப்பட வேண்டும். நம் சேவை சிறப்பாக இருக்க வேண்டும். ஜிப்ரில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளை பாராட்டுகிறேன். நான் கவர்னராக புதுச்சேரிக்கு வந்தபோது வெறும் 4,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. அது இன்றைக்கு 17 லட்சம் தடுப்பூசிகளாக உயர்ந்திருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. தடுப்பூசிகளையும் அது பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சென்றதில் ஆஷா பணியாளர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். புதுச்சேரியில் தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்ல வீடு வீடாக சென்றோம். அப்போது கசப்பான அனுபவங்களையும் சந்தித்தோம். சிலர் வீடுகளை சாத்திக் கொண்டனர். சிலர் திட்டினர். அதையும் தாண்டி தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சென்றோம். அதன் விளைவாக இன்று நாடும் பாதுகாப்பாக இருக்கிறது. புதுச்சேரி மாநிலமும் பாதுகாப்பாக இருக்கிறது.இவ்வாறு கவர்னர் பேசினார்.
இந்நிலையில் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்றி தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே நிகழ்வின் நிறைவில் தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்த அவர், இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், புதுச்சேரியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக ஜிப்மர் மருத்துவத் துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை ஏன் தவிர்த்தீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குள் நிகழ்ச்சியின் அடுத்த நிரல் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜனிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “ஜிப்மர் நிர்வாகத்தில் சில நேரங்களில் மொழி அறியாத காரணத்தால் அவர்களை அறியாமல் செய்யும் சில தவறுகளை, வேண்டுமென்றே செய்வது போல பொருள் கொள்ளக்கூடாது” என்று கூறினார்.
மேலும், “தன்வந்திரி வாழ்த்து என்பது அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் பாடுவது வழக்கமானது. ஆனால், அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பாடப்படவில்லை. பிறகு மருத்துவமனை இயக்குநரிடம் கேள்வி எழுப்பியபோது அது நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லை என்று பதிலளித்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சியின் அடுத்த நிரல் ஆரம்பமானது. ஆனாலும், தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறக்கூடாது என்பதற்காக நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார் தமிழிசை.
“இந்த கூட்டத்தில் இதைப் பேச வேண்டுமா என்று தோன்றியது. ஆனால் பேசியாக வேண்டியது அவசியம் என்பதால் சொல்லிவிட்டேன். ஆகவே புதுச்சேரியிலும், தமிழகத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் எந்த நிறுவனமும் இருக்காது. அதில் எங்கள் ஆளுமைக்கு உட்பட்டு நாங்கள் உறுதியளிக்கிறோம்,” என்று தமிழிசை தெரிவித்தார்.
இதற்கிடையே, மத்திய அரசு நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவது வழக்கமான நடைமுறை இல்லை என்றாலும், அந்தந்தமாநில மரபுகளுக்கு மதிப்புப்பளிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மனோன்மணீயம் பெ. சுந்தரனாரால் எழுதப்பட்ட “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது. அதே சமயம், புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.