ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த கவர்னர் ரவிக்கு, கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து அழைத்துச் சென்றார். பின், சுவாமி சன்னிதியில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில், கவர்னர், குடும்பத்துடன் நீராடினார். பின், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். காலை, 7:15 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட கவர்னர், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு திரும்பினார்.

காலை, 9:30 மணிக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு சென்று, கலாமின் பேரன் ஷேக் சலீம், உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின், பேக்கரும்பு என்னும் இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் காரில் மதுரை புறப்பட்டுச் சென்றார்.