மும்பையில் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டே உடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40 பேர் என தெரிகிறது. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாடண்டா தொகுதி சிவசேனா எம்எல்ஏவும், அமைச்சருமான தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதுபோன்ற செயல்கள் தொடரும் என்றும் சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பையில் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், திருமணம், இறப்பு, சினிமா தியேட்டர், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.