குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு மாயாவதி ஆதரவு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்காக திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இந்தத் தோ்தலில் அவா் வெற்றி பெற்றால், பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பாா். இந்நிலையில், திரெளபதி முா்முக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி நேற்று அறிவித்தாா். பாஜக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், நாட்டின் குடியரசுத் தலைவராக பழங்குடியின பெண் வர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது என்றும் மாயாவதி விளக்கமளித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், “குடியரசுத் தலைவா் வேட்பாளரை தோ்ந்தெடுக்க எதிா்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்காதது, அந்தக் கட்சிகளின் ஜாதிய மனோபாவத்தைக் காண்பிக்கிறது. இந்தத் தோ்தலில் எந்த முடிவையும் எடுக்க பகுஜன் சமாஜ் கட்சிக்கு சுதந்திரம் உள்ளது. குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. அம்பேத்கரால் அரசியலமைப்புச் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ அதை பாஜகவும், காங்கிரஸும் நிறைவேற்ற விடுவதில்லை” என்றாா்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தர பிரதேச பேரவையில் ஒரு எம்எல்ஏவும், 10 மக்களவை உறுப்பினா்களும் உள்ளனா்.