அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வருகை தர உள்ளார்.
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள கல்பட்டாவில் அலுவலகம் அமைத்து உள்ளார். அந்த பகுதியில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடத்திய மாணவர் சங்கத்தினர், ராகுல்காந்தியின் அலுவலகத்தை சூறையாடினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் வீசினார்கள். இதில் 3 போலீசார் காயமடைந்தனர். மேலும் வன்முறையாளர்கள் தாக்கியதில் அலுவலக உதவியாளர் ஒருவரும் காயமடைந்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்கள் கண்டனங்களை வெளியிட்டனர். இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக வருகிற 30-ந்தேதி வயநாடு வருகிறார். இந்த பயணத்தின்போது தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து கல்பட்டாவில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மகா பேரணி நடத்தினர். இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகம் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், “வயநாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஏற்கத்தக்கது அல்ல. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்துக்கு கேரள முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்தப் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டோா் மீது மாநில போலீஸாா் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டனா்” என்றாா்.