குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆமதாபாத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
மகாராஷ்டிரத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். குஜராத் மாநிலம் கோத்ராவில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 64 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்த மறுநாள், தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் கலவரம் நடந்தது. அதுதொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதமர் மோடி (அப்போதைய குஜராத் முதல்வர்) உள்பட 64 பேர் விடுவிக்கப்பட்டனர். அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. ஜாகியா ஜாஃப்ரியை சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் தன்னார்வ அமைப்பு ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் சான்டா க்ரூஸ் பகுதியில் வசித்து வந்த தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
கோத்ரா கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் விசாரணை ஆணையத்திடம் தீஸ்தா சீதல்வாட் வழங்கியதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் காவல் நிலையத்தில் டி.பி. பராட் என்ற குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டார்.