கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ப.சிதம்பரம்

கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் பொருளாதார மாடல் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து 31 ஆண்டுகளாக உலகமயமாக்கள் கோட்பாட்டை இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலக மயமாக்கல் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட 1991-ம் ஆண்டில் இருந்து நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியான வளர்ச்சியை எதிர்கொண்டிருந்தது. ஆனால் அரசியல் தலையீடுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டன. உள்நாட்டு உற்பத்தியானது 2004-ம் ஆண்டில் இருந்து 4 முறை 7.5% என்பதில் இருந்து 9% அளவுக்கு உயர்ந்து இருந்தது. மத்தியில் ஆளும் மோடி அரசானது, பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோசனைகளை கேட்க தயாராக இல்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 31 ஆண்டுகால பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில், அனுபவங்களைக் கொண்டு பொருளாதார கொள்கைகளை, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசில் 8.72 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதேநேரத்தில் மத்திய அரசானது 10 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. நாட்டில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். வறுமையால் வாடுபவர்கள் நாடுகள் பட்டியலில் மொத்தம் 140 இடங்களில் நமது நாடு 101-வது இடத்தில் இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். காங்கிரஸின் பிரதான இலக்காக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பஜ்ஜி விற்பனை செய்வது, பக்கோடா போடுவதை வேலைவாய்ப்பு என்றெல்லாம் சொல்லமாட்டோம். அதேபோல் கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகியவை மாநிலங்களின் பட்டியலில் இருந்தால்தான் அத்துறைகள் மேம்பாடு அடையவும் முடியும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.