வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
15வது கேரள சட்டசபையின் 5வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா கூறியது, கடந்த வாரம் வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அமளி ஏற்பட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கேரள சட்டசபையில் இன்று (நேற்று) வரலாறு காணாத சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக கேள்வி நேரம் முடிந்த பின்னர்தான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். ஆனால் வழக்கத்தை விட மாறாக கேள்வி நேரம் தொடங்கிய உடனேயே காங்கிரஸ் உறுப்பினர் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இது கேரள சட்டசபை வரலாற்றில் இதுவரை நடைபெறாத சம்பவமாகும். கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு முறையான பதில் கிடைக்கும். ஆனால் எதிர்க்கட்சியினர் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை’’ என குற்றம்சாட்டினார்.