நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்க தேசிய தேர்வு முகமை மறுத்துவிட்டது.
நாடு முழுவதும் எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வு ஜூலை 17-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். இளங்கலை படிப்பில் சேருவதற்கான கியூட் தேர்வு ஜூலை 15-ந்தேதி நடைபெறுவதாகவும், ஐ.ஐ.டி. யில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு ஜூலை 21-ந்தேதி நடப்பதாகவும் உள்ளது. மாணவர்கள் பலர் ஒருவரே பல தேர்வுகளை எழுத முயற்சி மேற்கொள்வதால் சிரமம் ஏற்படும். எனவே நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க தேசிய தேர்வு முகமை மறுத்துவிட்டது. தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு ஜூலை 17-ந்தேதி திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.