தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் பதிவுகளை வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி இனத்தவரான திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இருவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
திரெளபதி முர்மாவை பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தது தொடர்பாக திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா, சர்ச்சைக்குரிய வகையில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்? முக்கியமாக கவுரவர்கள் யார்? என கேள்வி எழுப்பி இருந்தார் ராம்கோபால் வர்மா. அவரது இந்தப் பதிவு கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. ராம்கோபால் வர்மாவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கம் அளித்த ராம்கோபால் வர்மா, மகாபாரதத்தில் திரெளபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயர் மிகவும் அபூர்வமானது. ஆகையால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
ஆனாலும் ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவுக்கு எதிராக பல இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் உ.பி. போலீசார், திரெளபதி முர்மா தொடர்பான டுவீட்டுக்காக ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.