ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் செயற்கை கருவூட்டலுக்காக 16 வயது சிறுமியின் கருமுட்டைகள் தானமாக பெறப்பட்டதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக இந்த கருமுட்டை விற்பனை நடந்ததாகவும் புகாா்கள் வந்தன. இது தொடா்பாக சிறுமியின் தாய், அவரது 2ஆவது கணவா், தரகா் மற்றும் போலி ஆதாா் அட்டை வழங்கியவா் என 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து பல கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது. அரசு சாா்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை சாா்பிலும் மருத்துவா்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. அரசு காப்பகத்தின் பாத்ரூம் சுத்தம் செய்யும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார். யாரேனும் நெருக்கடி அல்லது மிரட்டல் விடுத்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.