திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள்: சீமான்

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக பிரச்னையைப் பொருத்த அளவில் அது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை. அதில் கருத்து கூற முடியாது; அது அவர்களாகதான் பேசி தீர்வு காண வேண்டும். திமுக அரசின் ஒரு வருட கால ஆட்சியில் 80 சதவீத திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஒரு வருட சாதனை என முழு பக்கம் விளம்பரம் மட்டுமே செய்துள்ளனர். ஆனால் எட்டு சதவீத திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை.
மேலும் என்னென்ன திட்டங்கள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். சாதனைகள் என்பது மக்களுக்கு தானாக தெரிய வேண்டுமே தவிர பொதுக்கூட்டங்களை நடத்தி மேடையில் சாதனை புரிந்ததாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் விளம்பரத்தை நம்பி மட்டும் திமுக ஆட்சி செய்து வருகிறது

இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முதலில் சிறப்பு முகாம்களை மூடவேண்டும். கியூ பிராஞ்ச் அமைப்பை தடை செய்ய வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தரவேண்டும்.

பல இளைஞர்கள் திறமை படைத்தவர்களாக உள்ளனர் அவர்களது திறமை வெளியில் தெரியாமல் உள்ளது மற்ற நாடுகளில் அரசு வேலைதான் தரமானதாக இருக்கும் ஆனால் இங்கு அரசு வேலைதான் தரமற்றதாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை பொருத்தவரை யானைகள் அதன் போக்கில் விட வேண்டும். அவ்வையார் படத்தில் 1,000 யானைகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிறுத்தி காட்சிகளை அமைத்தார்கள். ராஜராஜ சோழன் தனது படையில் 60,000 யாணைகளை வைத்திருந்தார். ஆனால் தற்போது ஆயிரம் யானைகள் மட்டுமே இருப்பதாக கணக்கு சொல்லப்படுகிறது அனைத்தும் இறந்துவிட்டன. இதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்

மத்திய மோடி அரசாங்கத்தை பொருத்தவரை 8 ஆண்டுகளில் எதை சாதித்தார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும் அதானியையும், அம்பானியையும் உலக பணக்காரர்களாக மாற்றியதை தவிர அவர் வேறு எந்த ஒரு நல்லதையும் செய்யவில்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.