உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் கண்ணையா லால். கண்ணையா லாலின் தையல் கடைக்கு நேற்று வந்த இருவர் சட்டைக்கு அளவு கொடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் போல் வந்தனர். சட்டைக்கு அளவு எடுத்துக்கொண்டிருந்தபோது வாடிக்கையாளர்கள் போல் வந்திருந்தவர்களில் ஒருவர் கண்ணையாவை தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் கொடூரமாக தாக்கினார். கண்ணையாவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதுடன் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கண்ணையாவை கொடூரமாக கொலை செய்த ஹவூஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தரி ஆகிய இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உதய்பூர் தையல் கடைக்காரர் கண்ணையா லால் கொலை சம்பவத்திற்கு அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “உதய்ப்பூரில் நடந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ராஜஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நாம் நம்புவோம். போலீசார் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. தீவிரமயமாக்கல் பரவுகிறது. நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும். இடைநீக்கம் மட்டும் போதாது” என்றார்.