டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார், 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் அமைப்பின் செயலாளரான மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமை பணிக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இந்திய அரசு மனித உரிமைப் பாதுகாவலர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். சட்டபூர்வமான மனித உரிமைப் பணிகளைச் செய்யும் பாதுகாவலர்கள் மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகளுக்கு எதிரான பழிவாங்கல்கள், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என கூறியுள்ளது.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “டீஸ்டா செடல்வாட் மற்றும் 2 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் கருத்தைப் பார்த்தோம். இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தேவையற்றவை மற்றும் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும்” என கூறியுள்ளது.