ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், கண்ணையா லால் என்பவர், டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கண்ணையா லால், அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று, வழக்கம் போல் கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த கண்ணையா லாலை, கோஸ் முகமது, ரியாஸ் அக்தாரி என்பவர்கள், கத்தியால் குத்திக் கொலை செய்தனர். மேலும், இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த படுகொலை விவகாரத்தால், உதய்பூர் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. ஆங்காங்கே வன்முறை வெடித்ததை அடுத்து, பொது மக்கள் அமைதி காக்கும்படி, முதலமைச்சர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டார். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, கண்ணையா லாலை படுகொலை செய்த கோஸ் முகமது, ரியாஸ் அக்தாரி ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, உதய்பூர் மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதுடன், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஒரு மாத காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் சர்வதேச அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்த அமைப்பு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, குற்றவாளிகள் கோஸ் முகமது, ரியாஸ் அக்தாரி ஆகியோருக்கு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, கண்ணையாவை கொலை செய்த ஹவூஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தரி ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் பாகிஸ்தானின் கராச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பு தாவத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.