வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது: மம்தா

ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மம்தா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர். சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது, வன்முறை மற்றும் தீவிரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” எதுவாக இருந்தாலும் வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந்நிலையில் மதத்தின் பெயரிலான வன்முறைகளை ஏற்க முடியாது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், உதய்பூரில் நடந்த கொடூர கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரிலான வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை விரட்டுவோம். மேலும், அனைவரும் சகோதரத்துவத்தையும் அமைதியையும் கடைப்பிடிக்க ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.