மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் மூலம் 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பிராந்திய ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் முதல் மந்திரி என்.பிரேன் சிங், இன்று நண்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று, ராணுவம், மாநில காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர்வாசிகளின் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என கூறி உள்ளார்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமானோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.